

பாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ், தனது தயாரிப்புகள் எதையும் ஸ்ட்ரீமிங்கில் வெளியிடாது என்று தெரிகிறது. இது பற்றி மும்பையின் பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தரப்பு, தங்கள் தளத்தில் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளியாகவுள்ளது என அதிரடியாக விளம்பரம் செய்தது. இதில் அமிதாப் பச்சன் ஆயுஷ்மன் குரானா நடிக்கும் 'குலாபோ சிதாபோ', வித்யாபாலன் நடிக்கும் 'ஷகுந்தலா தேவி' உள்ளிட்ட பாலிவுட் படங்களும் அடங்கும். பெரிய நட்சத்திரங்களின் படங்களே ஓடிடி தளங்களில் வெளியாகும் போது இதைப் பார்த்து இனி மற்ற பெரிய தயாரிப்புகளும் அப்படியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முக்கியமாக பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்ன முடிவெடுப்பார்கள் என திரைத்துறையில் பலரும் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் தங்கள் படம் எதையும் யாஷ் ராஜ் தரப்பு ஓடிடியில் வெளியிடாது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து யாஷ் ராஜ் தரப்புக்கு நெருக்கமான ஒருவர் பேசுகையில், "யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகும் படங்களையும் வாங்க பல ஓடிடி தளங்கள் முன் வந்தன. ஆனால் பெரிய திரை அனுபவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள தங்கள் படங்களை, மொபைல், லேப்டாப் என சிறிய திரைகளில் மக்கள் பார்ப்பது நன்றாக இருக்காது என்று அவர்கள் நினைக்கின்றனர். மேலும், இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் திரையரங்க உரிமையாளர் தரப்புக்கு அவர்கள் ஆதரவாக இருக்கின்றனர். ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட யாஷ் ராஜ் குழுவைச் சேர்ந்த யாருமே ஓடிடி வெளியீடை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் துணைத் தலைவர் ரோஹன் மல்ஹோத்ரா, நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கும் அர்ஜுன் கபூர், பரினீதி சோப்ரா நடித்திருக்கும் 'சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்' திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும் என்று தெளிவுபடக் கூறியிருந்தார்.
மேலும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சைஃப் அலி கான், ராணி முகர்ஜி நடிக்கும் 'பண்டி அவுர் பப்ளி 2', ரன்பீர், வாணி கபூர் நடிக்கும் 'ஷம்ஷேரா', ரன்வீர் சிங்கின் 'ஜெயேஷ்பய் ஜோர்தார்', அக்ஷய்குமாரின் 'பிரித்விராஜ்' உள்ளிட்ட படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. மேலும் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது ஆண்டையொட்டி சில பிரம்மாண்ட படங்களைப் பற்றியும் அறிவிக்கவுள்ளனர். இதில் எந்தப் படமும் ஊரடங்கால் கைவிடப்படவில்லை என்றும், அனைத்து படங்களும் திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.