

கரோனா நெருக்கடி காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு சமயத்தில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து நடிகர் ஷாரூக் கான் பகிர்ந்துள்ளார்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றும் அவர்களுக்காக களத்திலிருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஷாரூக் கான் தான் நடத்தி வரும் நிறுவனங்கள், ஐபிஎல் அணி சார்பாக கோடிக்கணக்கான பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் மும்பையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டிடத்தை, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி தங்கவைக்க ஏதுவாக மொத்தமாக மாற்றி, மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது ஊரடங்கு/ லாக்டவுன் சமயத்தில் தான் உணர்ந்த பாடங்கள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"லாக்டவுன் பாடங்கள்... நாம் தேவைக்கு அதிகமான விஷயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் நாம் நினைத்ததை விட பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் குறைவே. வீட்டில் அடைந்து கிடக்கும்போது நமக்கு யாரிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களைத் தாண்டி நிறைய பேர் நம்மைச் சுற்றித் தேவையில்லை.
பாதுகாப்பு என்று நாம் நினைக்கும் போலியான விஷயங்களை நாம் துரத்தாதபோது நம்மால் கடிகாரத்தைச் சற்று நிறுத்தி வைத்துவிட்டு நமது வாழ்க்கையை மீண்டும் திட்டமிட்டுக்கொள்ள முடியும். நாம் கடுமையாகச் சண்டையிட்டவர்களுடன் சிரித்துப் பேசலாம். நம் சிந்தனைகள் அவர்களின் சிந்தனைகளை விட அவ்வளவு பெரியதல்ல என்று தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் விட மேலாக, யார் என்ன சொன்னாலும் அன்புக்கு இன்னமும் மதிப்பு உண்டு" என்று ஷாரூக் கான் குறிப்பிட்டுள்ளார்.