இர்ஃபான், ரிஷி கபூர் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்: ஏ.ஆர்.ரஹ்மான்
மறைந்த நடிகர்கள் இர்ஃபான் கான் மற்றும் ரிஷி கபூரின் மறைவுக்கு தன்னால் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்த முடியாமல் போனதற்கு வருந்துவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக பாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கானும், ரிஷி கபூரும் ஏப்ரல் 29, 30 தேதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இது ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு நிலவுவதால் இவர்களுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயானத்துக்கு இவர்களின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இவர்களின் பாலிவுட் நண்பர்கள் பலரால் கூட இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
இதுபற்றி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, "அவர்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் கண்டறியப்பட்ட இர்ஃபான் அதற்கான சிகிச்சையில் இருந்தார். குடல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்த நாள் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்த நடிகர் ரிஷி கபூர் காலமானார்.
