

கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 29 அன்று இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 30 அன்று காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
மும்பை மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
ரிஷி கபூரின் மறைவு பாலிவுட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூரின் கடைசி நிமிடங்களை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் மறைந்திருந்து எடுத்த வீடியோ பாலிவுட் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி கபூர் ஐசியூவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு மருத்துவமனை ஊழியர் ஒருவர் அதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை சமூக வலைதளங்களில் பகிரவும் செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மருத்துவமனை நிர்வாகத்தை சாடி வருகின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் குறித்து பாலிவுட் பிரபலங்களின் கருத்துகள் பின்வருமாறு:
அர்ஜுன் கபூர்: சில விஷயங்களை பொதுவெளியில் பகிர்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சில விஷயங்களை பொதுவெளியில் பகிரக்கூடாது என்பது. பிம்பங்கள் என்பது நாம் மறக்கமுடியாத அளவுக்கு சக்திவாய்ந்தவை.
கரண் வாஹி : இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரிஷி கபூர் மருத்துவமனையில் இருப்பதை அங்கு பணிபுரியும் யாரோ பதிவு செய்து பரப்பிவிட்டார்கள். நானும் அதை பார்த்தேன். அது அந்தரங்கத்தின் மீதான வன்முறை. அந்த வீடியோ உங்களுக்கு வந்தால், அதை உடனே அழித்து விடுங்கள்.