

கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூரால் தனது அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது. பயணத்துக்கான அனுமதியைப் பெற்றுவிட்டு டெல்லியிலிருந்து மும்பைக்கு காரில் பயணப்பட்டுள்ளார்.
மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ரத்தப் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை அன்று மும்பையில் காலமானார். அவரது உடல் அவர் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படாமலேயே நேரடியாக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளும் முடிந்தன.
ரிஷி கபூரின் மகளான ரித்திமாவால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை வீடியோ கால் மூலமாக ரித்திமா பார்த்தார். தற்போது தனது குடும்பத்தினருடன் இருக்க மும்பைக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். தான் பயணப்படும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ரித்திமா, "காரில் வீட்டிற்கு பயணம், மும்பை சென்று கொண்டிருக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திய ரித்திமா, "அப்பா ஐ லவ் யூ, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கள் என் வலிமை மிகுந்த போர் வீரன். நான் நீங்கள் இல்லாத குறையை ஒவ்வொரு நாளும் உணர்வேன். உங்கள் ஃபேஸ்டைம் அழைப்புகளை ஒவ்வொரு நாளும் நினைப்பேன். உங்களுக்கு விடை கொடுக்க நானும் அங்கு இருக்க விரும்புகிறேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா, ஐ லவ் யூ" என்று பகிர்ந்திருந்தார்.