

இர்ஃபான் கான் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது சில வருடங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அவருக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இர்ஃபான் கான் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (ஏப்ரல் 29) அன்று காலமானார். இவரது திடீர் மறைவு, இந்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இர்ஃபான் கானுக்கு சுதபா சிக்தர் என்ற மனைவியும், பாபில் மற்றும் அயான் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். தற்போது இர்ஃபான் கான் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"உலகமே இதை அவர்களின் தனிப்பட்ட இழப்பாக எடுத்துக் கொண்டிருக்கும் போது நான் எப்படி என் குடும்பத்து அறிக்கை என்று இதை எழுத முடியும்? லட்சக்கணக்கானோர் எங்களுடன் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, நான் எப்படி தனியாக இருப்பதாக உணர முடியும்? இது ஒரு இழப்பல்ல என்பதை நான் அனைவருக்கும் நிச்சயப்படுத்த விரும்புகிறேன். (இழப்பல்ல) அவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த விஷயங்களிலிருந்து நாங்கள் பெற்றுள்ள ஆதாயம், அதை இனி உண்மையில் செயல்படுத்திப் பார்த்து முன்னே செல்ல முடியும். அதே நேரத்தில் மக்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் பற்றியும் நான் பகிர விரும்புகிறேன்.
எங்களால் இதை நம்ப முடியவில்லை, ஆனால் அதை இர்ஃபானின் வார்த்தைகளில் சொல்கிறேன் "இது மாயாஜாலம் போல உள்ளது". அவர் இருக்கிறாரோ, இல்லையோ, அவருக்கு இந்த ஒரு பரிமாண யதார்த்தம் என்றுமே பிடித்ததில்லை. அவரிடம் எனக்கிருக்கும் ஒரே கோபம், அவர் என்னை நிரந்தரமாகக் கெடுத்து வைத்திருக்கிறார்.
முழுமைக்கான அவரது உழைப்பு என்னை எந்த விஷயத்திலும் சராசரியாக இருக்க விடுவதில்லை. இரைச்சல்களில் கூட இசையைக் கேட்கக் கூடியவர். எனவே அந்த இசைக்கு ஏற்ப பாடவும் நடனமாடவும் நான் கற்றுக் கொண்டேன். முரணாக நடிப்பில் எங்கள் குடும்பம் சிறந்ததாக இருந்தது, எனவே அழையா விருந்தாளிகளின் திடீர் வரவால் இரைச்சல்களில் சங்கீதத்தை பார்க்க கற்றுக் கொண்டேன். மருத்துவர்களின் அறிக்கைகள் கதைகளைப் போல இருந்தன, அதில் நான் முழுமையை எதிர்பார்த்தேன். அதில் எந்தவொரு தகவலையும் நான் விடவில்லை. இந்த முழுமையைத்தான் அவர் தன் நடிப்பிலும் எதிர்பார்த்தார்.
இந்த பயணத்தில் சில அற்புதமான மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அந்தப் பட்டியல் முடிவில்லாதது. ஆனால் சில பேர்களை நான் குறிப்பிடவேண்டி இருக்கிறது. ஆரம்பம் முதலே எங்கள் கைகளைப் பற்றிக் கொண்ட எங்கள் புற்றுநோய் நிபுணர் டாக்டர். நிதேஷ் ரோஹ்டோகி, டாக்டர் டேன் க்ரெல், டாக்டர். ஷ்த்ராவி, என்னுடைய இதயத்துடிப்பும், இருளில் விளக்காய் வந்த டாக்டர். செவந்தி லிமாயே.
இந்த பயணம் எத்தனை அற்புதமான, அழகான, நிறைவான, வலிமிகுந்த, ஆர்வம் மிகுந்த ஒன்று என்பதை விவரிக்க இயலாது. இந்த இரண்டரை ஆண்டுகளையும் ஒரு இடைவேளையாகத்தான் பார்க்கிறேன். அதற்கு ஒரு ஆரம்பமும், நடுப்பகுதியும், முடிவும் உண்டு. ஒரு இசைக்குழுவை நடத்துபவர் போல 35 வருட எங்களுடைய கூட்டணியிலிருந்து இர்ஃபான் விலகி விட்டார். எங்களுடையது திருமணம் அல்ல. அது ஒரு கூட்டமைப்பு.
என்னுடைய சிறிய குடும்பத்தை ஒரு படகில் இருப்பதாய் காண்கிறேன். எங்கள் மகன்களான அயன் மற்றும் பாபில் இருவரும் படகை முன்னோக்கிச் செலுத்துகிறார்கள். இர்ஃபான் அவர்களை வழிநடத்துகிறார். ஆனால் வாழ்க்கை என்பது சினிமா அல்ல. இதில் காட்சிகள் மீண்டும் எடுக்கப்படுவது கிடையாது. என்னுடைய குழந்தைகள் தங்கள் தந்தையின் வழிகாட்டுதலில் பேரின் இந்த படகைப் பாதுகாப்பாகச் செலுத்தி புயலைக் கடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
என்னுடைய குழந்தைகளிடம் முடிந்தால் தங்கள் தந்தை கூறிய முக்கியமான பாடம் ஒன்றைக் கூற முடியுமா என்று கேட்டேன்;
பாபில் : ‘நிச்சயமில்லா நடனத்திடம் சரணடைய கற்றுக் கொள்ளுங்கள், பேரண்டத்தில் உங்கள் விதியை நம்புங்கள்’
அயான் : ‘உன் மனதைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள், அது உன்னைக் கட்டுப்படுத்த விடாதே’
ஒரு வெற்றிகரமான பயணத்துக்குப் பின் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட இடத்தில் அவருக்குப் பிடித்த மல்லிகை செடியை நாங்கள் விதைக்கும்போது எங்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடும். காலமெடுத்தாலும் அதில் பூக்கள் பூக்கும். நான் ரசிகர்கள் என்று சொல்லாத இன்னும் பல வருடங்களுக்கு எங்கள் குடும்பமாக இருப்பவர்கள் அனைவரின் ஆன்மாவையும் அதன் நறுமணம் தொடும்"
இவ்வாறு இர்ஃபான் கானின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.