

கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (ஏப்ரல் 30) காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
மும்பை மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்நிலையில் ரிஷி கபூர் மறைவு குறித்து நடிகர் ஷாரூக் கான் உருக்கமான நீண்ட பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு இளைஞனாக பயமுறுத்தும் இந்த சினிமா உலகில் நுழைந்தபோது நான் பார்க்கப்பட்ட விதம் எனக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனக்கு போதிய திறமை இல்லையோ என்ற அச்சம் ஏற்பட்டது. தோல்வி என்பது எனக்கு ஒரு பிரச்சினையாய் இருக்கவில்லை. ஏனெனில் நான் தோற்றாலும் மிகப்பெரிய நடிகரான ரிஷி கபூருடன் இணைந்து நடித்திருந்தேன்.
முதல்நாள் படப்பிடிப்பில், என்னுடைய சீன் முடிவதற்காக காத்திருந்த ரிஷி கபூர் பின்னர் தனது முகத்தில் அந்த புகழ்பெற்ற சிரிப்புடன் என்னிடம் ‘நீ மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறாயே’ என்று கூறினார். அப்போதே நான் ஒரு நடிகனாகிவிட்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து என்னை அந்த படத்தில் ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி கூறினேன். அவர் எனக்கு எந்த விதத்தில் உந்துசக்தியாக இருந்தார் என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது.
பல விஷயங்களுக்காக அவரை நான் மிஸ் செய்கிறேன். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் என் தலையில் அவர் அன்பான முறையில் தடவிக் கொடுப்பதை.
நான் இப்போது இருக்கும் நிலைக்கு காரணமான ஆசீர்வாதமாக அதை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன். எப்போதும் அன்பு, நன்றி, அதீத மரியாதையுடன் உங்களை மிஸ் செய்வேன் சார்.
இவ்வாறு ஷாரூக் கான் கூறியுள்ளார்.