

எங்களுடைய உரையாடல்களை எப்போதும் நான் நினைவில் கொள்வேன் என்று ரிஷி கபூர் மறைவு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி கபூரின் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"பன்முகத்தன்மை, அன்பான குணம், சுறுசுறுப்பு... இதுதான் ரிஷி கபூர். மிகுந்த திறமைசாலியாக அவர் இருந்தார். எங்களுடைய உரையாடல்களை எப்போதும் நான் நினைவில் கொள்வேன். சமூக வலைதளங்களில் கூட சினிமா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய மறைவு வேதனையைத் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி".
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.