

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே ஏப்ரல் 28 அன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, நேற்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இர்ஃபான் கானின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தயாரிப்பாளர் சந்தீப் சிங் இர்ஃபானின் மறைவு குறித்த உருக்கமான இரங்கல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
உங்கள் இழப்பின் பாரத்தை என் தோள்களில் சுமப்பது என் இதயத்தில் மிகவும் கனமானதாக இருக்கும் என்று கற்பனை கூட செய்ததில்லை. என்னுடைய கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி இர்ஃபான் பாய். பலரும் என்னை ஏற்றுக் கொள்ள விரும்பாதபோது என்னோடு நீங்கள் இருந்தீர்கள்.
நீங்கள் அரிதானவர். நான் தொடர்ந்து நிகழ்காலத்தை தான் பயன்படுத்துவேன், ஏனென்றால் என்னை பொறுத்தவரை உங்களைப் போன்ற மனிதர்களுக்கு மரணமே கிடையாது. உங்கள் தனித்தன்மை, ஒளி, சினிமாவின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, உங்கள் வாழ்க்கை தத்துவம் யாவும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வழிநடத்தும்.
இர்ஃபான் பாயோடு என்னை கடைசியாக ஒருமுறை நடக்க வைத்ததற்கு நன்றி கடவுளே. உங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களும், நண்பர்களும் காத்திருக்கும்போது உங்களை வழியனுப்பி வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்கிறேன். நீங்கள் வெகுசீக்கிரம் போய்விட்டீர்கள் பாய்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.