

பெரிய சிரமமின்றி அவருக்கு நடிப்பு வந்தது. அட்டகாசமான நடிகர் என்று இர்ஃபான் கான் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"இர்ஃபான் கானின் மறைவைக் கேட்டது வருத்தமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். கிட்டத்தட்ட அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். கடைசியாக ’அங்ரேஸி மீடியம்’ பார்த்தேன். பெரிய சிரமமின்றி அவருக்கு நடிப்பு வந்தது. அட்டகாசமான நடிகர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு என் அனுதாபங்கள்".
இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.