

கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு நடிகர் ஆமிர் கான் உதவி செய்திருக்கிறார் என்ற வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி அன்று, டெல்லியில் கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் பகுதிக்கு ஒரு ட்ரக் வந்ததென்றும், அதில் ஒரு கிலோ கோதுமை மாவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. ஒரு கிலோதானே என்று பலரும் இதை வாங்காமல் போக, வாங்கிச் சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் ரூ.15,000 பணம் இருந்ததாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மொத்தமுமே நடிகர் ஆமிர் கானின் திட்டம் தான் என்று இந்த வீடியோவில் பேசியுள்ளவர் கூறியுள்ளார். உண்மையிலேயே தேவை இருப்பவர்கள் மட்டும்தான் ஒரு கிலோ பொட்டலங்களை வாங்குவார்கள் என்பதால்தான் ஆமிர் இப்படிச் செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ, இதில் சொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. ஆனாலும், இந்த வீடியோ வைரலாகியுள்ளது. பொதுவாகவே ஆமிர் கான் தான் செய்யும் உதவியை வெளியே சொல்ல மாட்டார் என்றே கருதப்படுகிறது. இந்த வீடியோ மற்றும் சம்பவம் குறித்து உறுதிப்படுத்த ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் ஆமிர் கானைத் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்து பதில் வரவில்லை.