

தனது நடிப்பு வாழ்க்கையில் தான் இப்போது இருக்கும் காலகட்டம் மிகவும் ஆர்வமூட்டக்கூடியது என்று நடிகை லாரா தத்தா கூறியுள்ளார்.
சமீபத்தில் ஹண்ட்ரெட் என்ற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகியுள்ளார் லாரா தத்தா. டிஜிட்டல் தளத்தின் வருகையால் அனைத்து வயதைச் சேர்ந்த நடிகைகளுக்கும் கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன என்று நினைக்கும் லாரா, தரமான படைப்புகளுக்கு வழி கிடைத்துள்ளது என்று கூறுகிறார்.
சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு லாரா தத்தா அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு பேசியுள்ளார்.
"வயது ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது. நான் 40 வயதைக் கடந்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய கவலை (வயதாகும்போது) குறையும் என்று நினைக்கிறேன். சுயத்தைப் பற்றிய சிந்தனை என்பது குறையும். இப்போது இந்தத் தளத்தில் நடிகராக இருக்க அற்புதமான நேரம். நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஒரு நடிகை 35 வயதைக் கடந்தால், திருமணமாகிவிட்டால் வாய்ப்புகள் வராது என்று சொன்ன காலம் எல்லாம் மலையேறிவிட்டன. தரமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், அதற்கான தேவை அதிகம் இருக்கிறது. முக்கியமாக இணையத்தில். எந்த வயதைச் சேர்ந்த நடிகைகளுக்கும் கதாபாத்திரம் உள்ளது. நன்றாக எழுதப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் வருகின்றன.
நான் பாலிவுட்டில் நுழைந்தது நட்சத்திரமாக வேண்டும் என்பதற்காக அல்ல. நடிகையாக வேண்டும் என்பதற்காக. இப்போதுதான் நான் நடிக்க வந்ததற்கான காரணம் நிறைவேறியுள்ளது. அந்தத் தொடரில் நீங்கள் பார்ப்பது ஒரு வித்தியாசமான லாராவை. நான் அதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன் என்பதைப் பார்த்தால் தெரியும்" என்று கூறியுள்ளார் லாரா தத்தா.