

மனிதத்தை நோக்கி எடுத்துவைக்கும் சின்ன அடி என்ற பெயரில் நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கரோனா நெருக்கடிக் காலத்தில் மக்கள் அனைவரும் கருணையுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா ஊரடங்கு அமலில் வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் கரோனா தொடர்பான விழிப்புணர்வை தங்களுடைய சமூக வலைதளத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதில் 77 வயதான அமிதாப் பச்சன், தொடர்ச்சியாக கரோனா தொடர்பான விழிப்புணர்வை தன்னைப் பின் தொடர்பவர்களிடம் உருவாக்கி வருகிறார்.
தற்போது தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் பேசியிருப்பதாவது:
"எனது அம்மாவின் கருவிலிருந்து நான் வெளியே வந்தபோது ஒரு மருத்துவர் என்னை அவர் கைகளில் தாங்கினார். ஒரு செவிலியர் அவரது மென்மையான கைகளால் என்னைக் குளிப்பாட்டினார். எனது ஆசிரியர் எனது விரல்களை அவரது விரல்களால் பிடித்து எனக்கு முதல் எழுத்தைச் சொல்லித் தந்தார். நான் பள்ளிக்குச் சென்றபோது எனது பாதுகாப்பு எனது காரின் ஓட்டுநரிடம் இருந்தது.
நான் சாப்பிட்டபோதெல்லாம், எங்கள் சமையல்காரரின் அன்புக் கரங்களால்தான் அந்த உணவு தயாரானது என்பது எனக்குத் தெரியும். நமக்கு எப்போதும் அந்தக் கைகள் தேவை. இப்போதும் தேவை. அந்தப் பாதுகாப்பான கைகள், பாதுகாக்கும் கைகள், வழிநடத்தும் விரல்கள் தேவை.
இன்று கை கழுவுவதும், சமூக விலகலும் நமது பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக ஆகிவிட்டது. ஆனால், மனிதத்தை நாம் கை கழுவிட வேண்டாம் என்று நான் வணங்கி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நம்மைச் சுற்றி இருக்கும் மக்கள் மீது சந்தேகம் வேண்டாம், அவர்களை ஒதுக்க வேண்டாம், அவமதிக்க வேண்டாம். விழிப்புடன் இருப்போம், கருணையுடன் இருப்போம், இரக்கத்துடன் இருப்போம், அனைவரையும் சேர்த்துக் கொண்டு ஒற்றுமையுடன் இருப்போம். நாம் அனைவரும் மனிதனாக இருப்போம்" என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.