சாமானிய மக்களை எரிச்சலூட்டும் பதிவுகள்: மன்னிப்பு கேட்ட கரண் ஜோஹர்

சாமானிய மக்களை எரிச்சலூட்டும் பதிவுகள்: மன்னிப்பு கேட்ட கரண் ஜோஹர்
Updated on
1 min read

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் என்ன செய்தென்று தெரியாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நன்றி பிரபலங்களே’ என்ற தலைப்பிட்ட ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கரோனா பாதிப்புகளுக்கு நடுவே பிரபலங்களின் வீடியோக்கள் எப்படி சாமானிய மக்களை எரிச்சலூட்டுகின்றன என்பது குறித்து வஞ்சப் புகழ்ச்சியுடன் விளக்கப்பட்டிருந்தது. அதில் எலன் டிஜெனரஸ், சாம் அர்டினேஜ், எமாண்டா கெல்லர் உள்ளிட்டபல பிரபலங்களின் பதிவுகளைப் பற்றி பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த கரண் ஜோஹர் அதில் குறிப்பிட்டிருந்ததாவது:

''இந்த வீடியோ என்னை மிகவும் பாதித்துள்ளது. என்னுடைய பல பதிவுகள் பலரது உணர்வுகளோடு விளையாடுபவையாக இருந்துள்ளன என்பதை உணர்கிறேன். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவை யாவும் உள்நோக்கத்துடன் பகிரப்பட்டவை அல்ல. ஆனால் எந்தவித பொறுப்புணர்வும் இன்றி பகிரப்பட்டிருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள்''.

இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து தன் நடவடிக்கைகளை கரண் ஜோஹர் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவேற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in