

தான் எழுதியதாகப் பரப்பப்படும் ட்விட்டர் பதிவு போலியானது என்று பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி எழுதியதாக ஒரு ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இந்துக்களுக்கு எதிராக ஜாவேத் ஜாஃப்ரி கருத்து தெரிவித்துள்ளார் என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் தன் பெயரில் பரப்பப்படும் அந்த ட்விட்டர் பதிவு போலியானது என ஜாவேத் ஜாஃப்ரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
''முதலில் அந்தப் பதிவே ஒரு போலி. அதுபோன்ற எதையும் நான் பதிவிடவும் இல்லை. அது என்னுடைய ட்விட்டர் முகப்புப் படமும் இல்லை. அப்படி நான் ட்வீட் செய்திருந்தால் யாராவது பின்னூட்டம் இட்டிருப்பார்கள். அந்த ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்தவரே கூட திட்டியிருப்பார்.
என்னிடம் தைரியம், பதில் இரண்டுமே உள்ளன. உங்களுடைய கொள்கையைப் போலவே இந்த ஸ்க்ரீன்ஷாட்டும் போலியானது. மக்கள் அதை சரிபார்த்திருக்கலாம். இப்போது இந்த ஸ்க்ரீன்ஷாட்டின் உறுதித்தன்மையை அதைப் பரப்பியவர் நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும். இந்தப் போலியான படம் முதன்முதலில் ஃபேஸ்புக்கிலிருந்துதான் பரவியது. வெறுப்பு இந்த நாட்டில் வேகமாகப் பரவிவிடுகிறது.
போலிச் செய்திகளை பரப்பினாலோ, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம் பிரதமர் கூறியுள்ளார். எனவே, இதைப் பரப்பியவரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு எதிராக அவதூறு வழக்கும் தொடரப்படும்.
மதம், சாதி, இனம் அனைத்தையும் கடந்த மனிதநேயத்தின் பெயரால் உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிலர் இப்படி பொய்யையும், வெறுப்பையும் பரப்புகின்றனர். உணர்வுள்ள மதசார்பற்ற இந்தியர்கள் நிச்சயம் இதை சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்று இதைப் பரப்பியவர்கள் புரிந்து கொள்வார்கள்''.
இவ்வாறு ஜாவேத் ஜாஃப்ரி கூறியுள்ளார்.