

தனக்கு 'ஷோலே' படத்தை ரீமேக் செய்யும் ஆர்வமில்லை என்று இயக்குநர் ரமேஷ் சிப்பி கூறியுள்ளார்.
1975 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் 'ஷோலே'. இதில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்ஜீவ் குமார், ஹேமமாலினி, ஜெயா பச்சான் ஆகியோர் நடித்திருந்தனர். நாயகர்களை விட, வில்லன் கப்பார் சிங்காக நடித்த அம்ஜத் கானின் கதாபாத்திரம் புகழ்பெற்றது. இந்திய சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படமாக 'ஷோலே' இன்றளவும் கருதப்படுகிறது. மும்பை மினர்வா திரையரங்கில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் ஓடி சாதனை படைத்தது. பணவீக்கத்தை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் இதுவரை இந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையும் 'ஷோலே'வையே சேரும்.
முன்னதாக 2007 ஆம் ஆண்டு, இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'ஆக்' என்ற பெயரில் ஷோலேவை ரீமேக் செய்தார். ஆனால் விமர்சனம், வசூல் என இரண்டு வகையிலும் படம் படுதோல்வியடைந்தது. எனவே அதை ஒரு ரீமேக்காக மக்கள் கருதவில்லை. எனவே, பிரபலமான பழைய படங்களை ரீமேக் செய்து வரும் பாலிவுட்டின் ட்ரெண்டில் 'ஷோலே'வும் (ஒழுங்காக) ரீமேக் செய்யப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தால், அப்படி நடக்காது என்று கூறியிருக்கிறார் படத்தை இயக்கிய ரமேஷ் சிப்பி.
"'ஷோலே'வை வேறொரு வித்தியாசமான வகையில் சித்தரிக்கலாம் என்ற யோசனை வந்தாலேயொழிய, அதை ரீமேக் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. நான் ரீமேக்குக்கு எதிரானவன் என்று இதற்கு அர்த்தமில்லை. நிறையப் படங்கள் அழகாக ரீமேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அது எளிதான காரியமல்ல. அந்தக் குறிப்பிட்ட படத்தின் உலகத்தை, பாணியை எப்படி நீங்கள் மீண்டும் உருவாக்குகிறீர்கள் என்பதை வைத்துதான் இருக்கிறது.
நிறைய நடிகர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளில் நடிக்க வைத்தது, 70 எம் எம் திரையைப் பற்றி அறிமுகம் செய்தது என அன்று 'ஷோலே'வை எடுத்தது மிகப்பெரிய சவால். எங்கள் முயற்சிகள் வீணாகவில்லை என்பதில் மகிழ்ச்சி. மக்களுக்கு எங்கள் படம் பிடித்தது. 45 வருடங்கள் கழித்தும் அதைப் பாராட்டுகின்றனர். அதைப் பற்றிப் பேசுகின்றனர். அப்படி ஒரு அசாத்தியமான படத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது" என்று ரமேஷ் சிப்பி கூறியுள்ளார்.
'ஷோலே' மட்டுமல்ல, 'அந்தாஸ்', 'சீதா அவுர் கீதா', 'ஷான்', 'ஷக்தி', 'சாகர்' என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை சிப்பி இயக்கியுள்ளார். 80-களில் இவர் இயக்கிய தொடர் 'புனியாத்' தற்போது மறு ஒளிபரப்பபு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.