நடிக்க முடியவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்: நசீருதீன் ஷா வெளிப்படை

நடிக்க முடியவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்: நசீருதீன் ஷா வெளிப்படை
Updated on
1 min read

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா, தொலைக்காட்சி, சினிமா, வெப்சீரிஸ் என்று இன்றளவும் ஓடிக்கொண்டிருப்பவர். 1967ஆம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிய அவர் இதுவரை நூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நசீருதீன் ஷா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

''நான் செய்யவேண்டிய கடமை இன்னும் பாக்கியிருப்பதாகவே உணர்கிறேன். ஒரு நடிகனாக நான் இன்னும் முழுமை பெறவில்லை. பார்வையாளர்களுக்குக் கொடுக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. என்னை இன்னும் மக்கள் திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதே நான் செய்த பாக்கியம். நான் என்னுடைய பணியை விரும்புகிறேன். நடிப்பை விரும்புகிறேன்.

நடிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. அது எனக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. எனக்கு நடிப்புவெறி பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஒருவேளை நாளை காலை எழும்போது என்னால் நடிக்க முடியவில்லை என்றால் அநேகமாக தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைக்கிறேன். அது இல்லாமல் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது?

புதிய இயக்குநர்களோடு பேசும்போது அவர்களுக்கு உதாரணமாக ஹபீப் தன்வீர், கிரீஷ் கர்னாட், ஓம் புரி, ஷ்யாம் பெனகல், சத்யதேவ் டூபே உள்ளிட்ட இயக்குநர்களைச் சொல்வேன். நான் இளையவனாக இருக்கும்போது எனக்கு முன்மாதிரிகளாக இருந்தவர்கள் அவர்கள்தான். ஒருவர் கஷ்டப்படும் நேரத்தில் அவருக்குத் தேவை ஊக்கம் மட்டுமே. அவர்கள் எப்போதும் எங்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.

எங்களுடைய துயரமான காலங்களில் கூட நாங்கள் நம்பிக்கையுடன் போராடி நடிகர்களாக ஆவதற்கு அவர்கள்தான் காரணம். எனவே நான் புதிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களோடு பணியாற்றும்போது அவர்களுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி ஊக்கப்படுத்த முயல்வேன்''.

இவ்வாறு நசீருதீன் ஷா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in