

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 35 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்ததால் உயிரிழப்பு 308 ஆக அதிகரித்துள்ளது. 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 7 ஆயிரத்து 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 856 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,985 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்பு 150-ஐ நெருங்கியுள்ளது.
மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் அரசும், காவல்துறையும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மும்பை காவல்துறை ஷாரூக் கான் படத்தின் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து அறிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘மெயின் ஹூன் நா’. இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் ‘ஏகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில், பேசும்போது எச்சில் தெறிக்கும் ஆசிரியரிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் முகத்தில் கைக்குட்டை, முகமூடி ஆகியவற்றை அணிந்து கொள்வார்கள். ஒரு காட்சியில் அந்த ஆசிரியர் பேசும்போது தெறிக்கும் எச்சிலிலிருந்து தப்பிக்க ஷாரூக் கான் ‘மேட்ரிக்ஸ்’ ஹாலிவுட் படத்தில் வருவது போன்று டைவ் அடிப்பார்.
இந்தக் காட்சியை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காவல்துறை, ''மாஸ்க் அணிந்து கொண்டால் ஷாரூக் இனிமேல் இது போன்ற சாகசங்களைச் செய்ய வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்ப்பூர் காவல்துறை இணையத்தில் மிகவும் கிண்டலடிக்கப்பட்ட மஸக்கலி ரீமிக்ஸ் பாடலைக் குறிப்பிட்டு, யாராவது தேவையில்லாமல் வெளியே வந்தால் மஸக்கலி பாடலை திரும்பத் திரும்பக் கேட்கவைப்போம் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.