

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 9 மணி 9 நிமிடங்களால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையைக் காட்ட, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள், வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து, அதற்குப் பதிலாக அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச், மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை வைத்து ஒளியேற்றச் சொன்னார். இது தேசம் முழுவதும் பலதரப்பட்ட மக்களால் பின்பற்றப்பட்டது.
தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்தது என்றும், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் மிகக் குறைந்த பார்வையாளர் எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரங்களோடு ஒப்பிடும்போது பார்வையாளர் எண்ணிக்கை அந்த 9 நிமிடங்களில் 60 சதவீதம் குறைந்தது. இரவும் 8.53 முதலே குறைய ஆரம்பித்த இந்த எண்ணிக்கை இரவு 9.30க்குப் பிறகே சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது.
மேலும் உலகின் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் மற்றும் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை முறையே 43 சதவீதம் மற்றும் 13 சதவீதம் இந்த வாரம் உயர்ந்துள்ளதாக பார்க் அறிக்கை தெரிவிக்கிறது.