

மும்பை காவல்துறையைப் பாராட்டி நடிகர் அஜய் தேவ்கன் பகிர்ந்திருந்த ஒரு வீடியோவுக்கு காவல்துறையின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நகைச்சுவையான பதில் சொல்லப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து காவல்துறைக்குக் கூடுதல் பொறுப்பு தலையில் ஏற்றப்பட்டது. குறிப்பாக ஆரம்பத்தில் தொற்று அதிகமாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை அரும்பாடுபட்டது.
இந்த நேரத்தில் வீட்டில் இருக்க முடியாமல் மக்களுக்காகச் சாலைகளில் இறங்கி அயராது உழைக்கும் மும்பை காவல்துறையைப் பாராட்டி ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜய் தேவ்கன் காவல்துறை தரப்பைப் பாராட்டி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள மும்பை காவல்துறையின் ட்விட்டர் பக்கம், "அன்பார்ந்த 'சிங்கம்', 'காக்கி' இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். மும்பை ஒரு காலத்தில் இருந்ததைப் போல (once upon a time in mumbai) நிலை மாற இதைச் செய்ய வேண்டும்" என்று பதில் கூறியது.
'சிங்கம்', 'காக்கி', 'ஒன்ஸ் அபாண்ட் எ டைம் இன் மும்பை' என மூன்றுமே அஜய்தேவ்கன் நடித்திருக்கும் படங்கள். இதில் 'சிங்கம்' படத்தில் அஜய் தேவ்கன் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருந்தார். காவல்துறை தரப்பின் இந்த புத்திசாலித்தனமான நகைச்சுவை பதிலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.