

தனது மஸக்கலி பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை மறைமுகமாகக் கிண்டலடித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
2009-ஆம் ஆண்டு இந்தியின் வெளியான திரைப்படம் 'டெல்லி 6'. அபிஷேக் பச்சன், சோனம் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோ நடித்திருந்த இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியிருந்தார்.
படம் சுமாராக ஓடினாலும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. குறிப்பாக 'மஸக்கலி' என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'டெல்லி 6' பாடல்களின் உரிமை டி சீரிஸ் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது 'மர்ஜாவன்' என்ற படத்துக்காக இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பாடலின் வீடியோ புதன்கிழமை டிசீரிஸின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.
ஆனால் பாடல் ரசிக்கும்படி இல்லாமல் போனதால் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மேலும் அசல் பாடலின் அழகைக் கெடுக்கும் விதமாகவும் இது இருப்பதாகப் பல ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
சில மணி நேரங்கள் கழித்து, ரஹ்மானே தனது கருத்தைக் கூற முன்வந்தார். நேரடியாக யாரையும் குறிப்பிட்டுத் தாக்கிப் பேசவில்லையென்றாலும் 'மஸக்கலி' ரீமிக்ஸை அவர் கலாய்த்ததாகவே இதை ரசிகர்கள் பார்க்கின்றனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மான், "குறுக்குவழிகள் இல்லை, ஒழுங்காக உருவாக்கப்பட்டது, தூங்காத இரவுகள், மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது, 200-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், பல தலைமுறைகள் நீடித்திருக்கும் இசையைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் 365 நாட்களும் விடாமல் மூளையைக் கசக்கியது.
ஒரு இயக்குநரின் அணி,
ஒரு இசையமைப்பாளர்,
ஒரு பாடலாசிரியர்,
ஆதரவு தர நடிகர்கள், நடன இயக்குநர்கள் மற்றும் இடைவிடாமல் உழைத்த படக்குழு. நிறைய அன்பும், பிரார்த்தனைகளும்" என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ட்வீட்டுடன் அசல் 'மஸக்கலி' பாடலை ரசியுங்கள் என்று லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்.
ரஹ்மானின் கலாய்ப்பு பலரின் பாராட்டுகளை, பகிர்வுகளைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் அனிருத்தும் ரஹ்மானின் இந்த ட்வீட்டைப் பகிர்ந்து, மொஸார்ட் ஆவேசமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் பாடல்கள் குறித்து "கடந்த 2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமிக்ஸ் செய்யப்பட்ட எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவற்றில் சில பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன" என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது