

நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த திங்கள் (06.04.20) அன்று பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஷா, தனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றும், தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த செய்தி பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெஃபாலி ஷா கூறியிருப்பதாவது:
''நேற்றிரவு எனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் நான் விழித்தபோது பலர் என் உடல்நிலையில் அக்கறை கொண்டு எனக்கு செய்தி அனுப்பியிருந்தார்கள். சிலர் என்னைத் தொலைபேசியில் அழைக்கச் சொல்லி அவர்களது எண்களைக் கூட அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள். ஒருவேளை தெரியாதவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் அனைவரும் என் மீது அக்கறை கொண்டு அன்பைப் பொழிந்திருந்தனர். அவற்றைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒரு நடிகை என்பதற்காக அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. என்னை சக மனிதியாக நினைத்து அவர்கள் அன்பு செலுத்துகின்றனர்.
நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தச் சூழலை அனைவருமே எதிர்கொண்டிருப்பார்கள். இத்தனை எதிர்மறையாக ஒரு விஷயம் நடக்கும் என்று நினைக்கவில்லை. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாவும் இருக்கிறோம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. என் ஃபேஸ்புக் பதிவில் எழுதப்பட்டிருக்கும் பதிவு உண்மையல்ல. அதை யார் எழுதியது என்பது கடவுளுக்கே வெளிச்சம். அனைவருக்கும் நன்றி''.
இவ்வாறு ஷெஃபாலி ஷா கூறியுள்ளார்.