

23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்த முடிவுபெறாத ஒரு படத்தின் படப்பிடிப்புக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
1997-ம் ஆண்டு 'ராதேஷ்யாம் சீதாராம்' என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். சுனில் ஷெட்டி இதன் கதாநாயகன். 'பகால் பந்தி', 'வெல்கம் பேக்', 'ரெடி', 'சிங் இஸ் கிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அனீஸ் பஸ்மி இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஒரு குரங்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.
இந்தப் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய் அதிக மேக்கப்பில் பாரம்பரிய உடையில், நிறைய நகைகளுடன் சுற்றி இருப்பவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே பணியாற்றுவது, அந்தக் காலகட்டத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த பல படங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இதைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
முன்னதாக, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையருடன் இந்தக் குரங்கும் இருக்கும் ஒரு புகைப்படத்தை அனீஸ் பஸ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன், "இந்தப் புகைப்படம் ராதேஷ்யாம் சீதாராம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் சில பிரச்சினைகளால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் நாயகன், நாயகி என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்தனர். படம் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக நன்றாக ஓடியிருக்கும். புகைப்படத்திலிருக்கும் குரங்கை நீங்கள் இதற்கு முன் எந்தப் படத்தில் பார்த்திருக்கிறீர்கள்?" என்று குறிப்பிட்டிருந்தார்.