

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள ‘ஃபேமிலி’ குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.
4.35 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தின் ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் தனது மூக்குக் கண்ணாடியைத் தேடுகிறார். அதன் பிறகு பாடகர் திலிஜித் தோசன்ஜ், ரன்பீர் கபூர், மம்மூட்டி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா என ஒவ்வொருவராக வரிசையாக கேமரா முன் தோன்றுகின்றனர்.
இறுதியில் மீண்டும் கேமராவில் தோன்றும் அமிதாப், ''இப்படத்தை நாங்கள் உருவாக்க இன்னொரு காரணமும் உள்ளது. இந்தியத் திரைப்படத் துறை என்பது ஒன்றுதான். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். ஆனால் எங்களுக்குப் பின்னால் இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் இன்னொரு பெரிய குடும்பம் உள்ளது. தினக்கூலிப் பணியாளர்களான அவர்கள் இந்த ஊரடங்கில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் டிவி சேனல்களோடு ஒன்றிணைந்து நிதி திரட்ட முன்வந்துள்ளோம். இந்தக் கடினமான காலகட்டத்தில் நிம்மதியளிக்க தினக்கூலிப் பணியாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது'' என்று கூறுவதோடு இந்தக் குறும்படம் நிறைவடைகிறது.