பிரதமர் மோடியின் வேண்டுகோள்: முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவு

பிரதமர் மோடியின் வேண்டுகோள்: முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவு
Updated on
1 min read

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு ஒளியேற்றுவது தொடர்பாகப் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.

என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சியினர் கிண்டலும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், முன்னணி திரையுலகினர் பலரும் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதில் முக்கியமாகத் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ராம்சரண், பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மலையாளத் திரையுலகில் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தித் திரையுலகினர் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட்கள் வெளியிட்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ஜீவா மட்டுமே தனது ட்விட்டர் பதிவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ அனைத்துக்குமே பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் தளத்திலிருந்து நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in