

தினக்கூலிப் பணியாளர்களுக்காக பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது ஓராண்டு ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளார்.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.
இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தினக்கூலிப் பணியாளர்களுக்காக தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஏக்தா கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''கரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. யாரும் இதற்கு முன்பு கண்டிராதது. நம் நாடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களின் துயரத்தைத் துடைக்க நாம் அனைவரும் ஏதாவது செய்தாக வேண்டும். பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தினக்கூலிப் பணியாளர்களின் நலனைக் கவனத்தில் கொள்வது என் முழு முதல் பொறுப்பாகும். படப்பிடிப்புகள் இல்லாத இந்தச் சூழலில் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள்தான்.
பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என்னுடைய சக தொழிலாளிகள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்படாமல் இருக்க என்னுடைய ஓராண்டு சம்பளமான ரூ. 2.5 கோடியை வழங்குகிறேன்.
ஒற்றுமையே முன்னோக்கிச் செல்வதற்கான வழி. பாதுகாப்பாய் இருப்போம். ஆரோக்கியத்துடன் இருப்போம்''.
இவ்வாறு ஏக்தா கபூர் கூறியுள்ளார்.