

நேற்று (மார்ச் 3) தனது 51-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அஜய் தேவ்கனுக்கு, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நகைச்சுவையான முறையில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நேற்று (மார்ச் 3) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் அவருக்கு டிக் - டாக் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு டிக் டாக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ரித்தேஷ். இதில் அவர் சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்களைக் கடுப்பாகத் தேய்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி ஜெனிலியா இன்னும் சில பாத்திரங்களைக் கொண்டு வந்து தேய்க்கச் சொல்கிறார். அவர் கையில் ரித்தேஷை மிரட்ட கட்டை ஒன்றும் வைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ரித்தேஷ், அஜய் தேவ்கனின் தில்வாலே படத்தில் வரும், 'எனக்கும் ஒரு காலம் வரும், அப்போது பார்' என்ற பொருள் வருமாறு ஒரு பாடலைப் பாடுகிறார்.
இந்த வீடியோவுடன், "அன்பார்ந்த அஜய் தேவ்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வீட்டுத் தனிமையில் உங்கள் ஒரு பாடலை வைத்து ஜெனிலியாவுடன் நகைச்சுவை. சிறப்பான பிறந்த நாளாக இருக்கட்டும் சகோதரா" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், விவேக் ஓபராய், நீல் நிதின் முகேஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் அஜய் தேவ்கனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.