

நடிகர் ஷாரூக் கான், தான் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு முறைகளில் நிவாரண உதவி அளிக்க முன்வந்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறையைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என நிதி திரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஷாரூக் கான், "இந்த நேரத்தில் உங்களுக்குத் தொடர்பில்லாத, தெரியாத, ஆனால் உங்களைச் சுற்றி அயராது உழைப்பவர்கள் தாங்கள் தனியாக இல்லை என்று உணர வேண்டியது முக்கியம். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒரு சிறு விஷயத்தைச் செய்வதை உறுதிப்படுத்துவோம். இந்தியாவும், அனைத்து இந்தியர்களும் ஒரே குடும்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை, கொல்கத்தா, புது டெல்லி ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக உதவ முடிவெடுத்திருக்கும் ஷாரூக் கான், தான் அளிக்கவுள்ள உதவிகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
1. பி.எம் கேர்ஸ் நிதி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி மூலம் இதற்கு நிதி தரப்படும்.
2. மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதி: ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் இதற்கு நிதி தரப்படும்.
3. சுகாதாரத் துறையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்: கேகேஆர் மற்றும் மீர் அறக்கட்டளை சேர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து, 50,000 பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும்.
4. ஏக் சாத் - தி எர்த் ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளையும், ஏக் சாத்தும் இணைந்து மும்பையில் குறைந்தது ஒரு மாதத்துக்கு 5,500 குடும்பங்களுக்குத் தினசரி உணவு அளிக்கும்.
5. ரோடி ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளை, ரோடி அறக்கட்டளையோடு சேர்ந்து குறைந்தது ஒரு மாதத்துக்கு, தினமும் 10,000 பேருக்கு 3 லட்சம் உணவுப் பொட்டலங்களைத் தரும்.
6. வொர்க்கிங் பீபில்ஸ் சார்டர் அமைப்புடன் சேர்ந்து மீர் அறக்கட்டளை, குறைந்தது ஒரு மாதத்துக்கு, டெல்லி முழுவதும் உள்ள, அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 2500 தினக்கூலிப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களைத் தரும்.
7. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு: மீர் அறக்கட்டளை, ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பார்த்துக் கொள்ள மாதாந்திர உதவித்தொகை தரும். இதற்காக உத்தரப் பிரதேசம், டெல்லி, பிஹார், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.