

வீட்டுக்குள்ளேயே இருக்கும் இதுபோன்ற தருணத்தில் உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.
தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள வீடியோவில், ''கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி வீட்டுக்குள் இருப்பது மட்டுமே. இதுபோன்ற தருணங்களில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனவே நன்றாகச் சாப்பிடுங்கள். உடல்நலத்தோடு இருங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார்.
அதோடு சில உடற்பயிற்சிகளையும் சஞ்சய் தத் வீடியோவில் செய்து காட்டுகிறார்.