ஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல: ஹ்ரித்திக் ரோஷன்

ஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல: ஹ்ரித்திக் ரோஷன்
Updated on
1 min read

ஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல என்று தனது ட்விட்டர் பதிவில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் திரையுலகப் பிரபலங்கள் தொடங்கி அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள் திரையுலகப் பிரபலங்கள்.

இன்று (ஏப்ரல் 1) முட்டாள் தினம். இது தொடர்பான பதிவுகள் எப்போதுமே சமூக வலைதளத்தை ஆட்கொள்ளும். ஆனால், இன்று அப்படியான பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.

புதிய மாதம் தொடங்கியிருப்பது தொடர்பாக மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பதிவில், "உலக அளவில் கரோனாவை எதிர்க்க புதிய மாதம், அதிக தீர்வு, அதிக வலிமை தேவை. ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம். வீட்டை விட்டு வெளியே வந்து முட்டாளாகாமல் இருப்போம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்போம்" என்று தெரிவித்தார்.

அவருடைய ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பதிவில், "அதோடு, ஊரடங்கு முடிந்த 22 ஆம் நாள் கொண்டாட்டமானதாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். ஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல. முழுமையான தீர்வு கிடைக்கும் வரை சமூக விலகலை நாம் தொடர வேண்டும். இது பல மாதங்கள் கூட ஆகலாம். தயவுசெய்து இதைப் புரிந்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in