சண்டைப் படங்களில் நடிக்க ஆசை: பிரியங்கா சோப்ரா

சண்டைப் படங்களில் நடிக்க ஆசை: பிரியங்கா சோப்ரா
Updated on
1 min read

தனக்கு இன்னும் நிறைய சண்டைப் படங்களில் நடிக்க ஆசை என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

ராபர்ட் ராட்ரிகஸ் இயக்கத்தில் 'வி கேன் பி ஹீரோஸ்' என்ற திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். ஏலியன்களால் கடத்தப்பட்ட தங்களின் பெற்றோர்களை அவர்களின் குழந்தைகள் மீட்கும் கதை இது. ஒருவகையில் இதுவும் 'ஸ்பை கிட்ஸ்' போலக் குழந்தைகள் சூப்பர் ஹீரோ படம். படு சுவாரசியமாக இருக்கும் என்று கூறுகிறார் பிரியங்கா சோப்ரா.

இப்படியான சாகசப் படங்களில் நடிப்பதைப் பற்றி அண்மையில் பேசியுள்ள பிரியங்கா, "எப்போதுமே என் சண்டைக் காட்சிகளை நானேதான் செய்திருக்கிறேன். எனது உடலை நான் அதிகம் நம்புகிறேன். அடிப்படையில் நான் உடல்ரீதியாக வலிமையாக இருப்பவள். எனக்கு ஆக்‌ஷன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். 'டான்', 'குவாண்டிகோ' உள்ளிட்ட படைப்புகளில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். இன்னமும் அப்படி நிறைய அடிக்க விரும்புகிறேன்.

நான் பாலின சமத்துவம் இருக்கும் உலகத்தை விரும்புகிறவள். பெண்ணை மையப்படுத்திய படம், பெண் இயக்குநர் போன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்த அவசியம் இல்லாத ஒரு நிலையை நாம் அடைவோம் என ஆசைப்படுகிறேன். நாம் ஆண்களை மையப்படுத்திய படம், அதனால் சென்று பார்க்கலாம் என்று சொல்வதில்லை தானே? பிறகு ஏன் பெண்களை மையப்படுத்திய படம் என்று மட்டும் சொல்ல வேண்டும்?

இப்படி இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியப் பெண்கள் திரைப்படம் போன்ற வார்த்தைகளை என் குழந்தைகள் பயன்படுத்தாத நிலைமை வர வேண்டும் என்று விரும்புகிறேன். பெண்கள் மெதுவாக தங்கள் கூட்டிலிருந்து வெளியே வர ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் சொந்தக் கால்களில் நிற்க அவர்களின் பெற்றோரும் ஆதரவு தருகின்றனர். எனது எல்லா கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் என் பெற்றோர் என்னுடன் நின்றனர்" என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in