

கரோனா நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்த, சில மணித்துளிகளிலேயே 25 கோடி ரூபாய் வழங்குவதாக அக்ஷய் குமார் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
அவர் ட்வீட் செய்த சில மணித்துளிகளிலேயே 25 கோடி ரூபாய் நிதியுதவியை முதல் திரையுலக பிரபலமாக அளித்துள்ளார் அக்ஷய் குமார். இது தொடர்பாக பிரதமர் மோடியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எதை விடவும் நமது மக்களின் உயிரே முக்கியம் என்கிற தருணம் இது. அதற்காக நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் எனது சேமிப்பிலிருந்து. ரூ.25 கோடியை நரேந்திர மோடி அவர்களின் PM CARES நிதிக்குத் தருகிறேன். வாருங்கள் உயிர்களைக் காப்பாற்றுவோம்"
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த உடனடி நிதியுதவிக்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.