

சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனத்தால் கரோனா வைரஸ் குறித்த தனது பதிவை அமிதாப் பச்சன் நீக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஞாயிறு (22.03.20) அன்று நாடு முழுவதும் மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும் இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்டோரைப் பாராட்டும் விதமாக பொதுமக்கள் வெளியே வந்து கைதட்டி உற்சாகப்படுத்துமாறும் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பரபரப்பான நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாலையில் மக்கள் அவரவர் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆராவாரம் செய்தனர். சிலர் ஒரு படி மேலே சென்று கூட்டமாக ஊர்வலம் சென்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக கைதட்டியும், மணியடித்தும் உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று (23.03.20) அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ‘மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணி, ‘அமாவாசை’ என்று அழைக்கப்படும் மாதத்தின் இருண்ட நாள், வைரஸ், பாக்டீரியா தீய சக்திகள் அதீத சக்தியுடன் இருக்கும். அப்போது கைதட்டுவதால் ஏற்படும் அதிர்வுகள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்க உதவும். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த பதிவோடு மூன்று கேள்விக்குறிகள் போடப்பட்ட தன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
அமிதாப் பச்சனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளானது. அது அவரது கருத்தா அல்லது அவர் அந்த கருத்தைக் கேலி செய்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பலரும் அதை போலிப்பதிவு என்று குற்றம் சாட்டியதையடுத்து அமிதாப் பச்சன் அப்பதிவை நீக்கினார்.