

பிரபல பாடகர் சோனு நிகம், நாளை சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், இணையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் முன்னணிப் பாடகராக வலம் வருபவர் சோனு நிகம். அனைத்து மொழிகளிலும் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இவருக்குப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையுண்டு. நாளை (மார்ச் 22) சுய ஊரடங்கு தினம் என்பதால் இணையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துபாயில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ள சோனு நிகம் கூறியதாவது:
"மார்ச் 5-ம் தேதி வரை நான் இமாலயத்தில் இருந்தேன். எனது மும்பை இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதால் மார்ச் 17-ம் தேதி வரை துபாயில் என் குடும்பத்துடன் செலவிடலாம் என்று வந்துவிட்டேன். இங்கு சகஜ நிலை திரும்பும்வரை காத்திருக்க வேண்டும். இப்போது நான் இந்தியா திரும்பினால் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே அதிக வேலைச் சுமையில் இருக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் சுமை அளிக்க விரும்பவில்லை.
இந்தியாவில் என் அப்பா, சகோதரியுடன் இருக்க விருப்பம்தான். ஆனால் மும்பை மற்றும் துபாய் விமான நிலையங்களைக் கடந்து வருவதால் ஒருவேளை எனக்குத் தொற்று ஏற்பட்டு அது அவர்களுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே (துபாயில்) நாங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். எனது மகன் நெவான் துபாயில் படித்து வருகிறார். அவரது பள்ளி மூடப்பட்டுவிட்டதால் நாங்கள் வீட்டில் செலவிட நிறைய நேரமுள்ளது. அதிக தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்வோம். தூய்மையும், பொதுமக்கள் தொடர்பிலிருந்து விலகி இருப்பதையும் பின்பற்றுகிறோம்.
மார்ச் 22-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல் 9 மணி வரை, நமது பிரதமர் நரேந்திர மோடியின் சுய ஊரடங்கைப் பின்பற்ற ஒட்டுமொத்த தேசமும் முடிவு செய்துள்ளதால், இரவு 8 மணிக்கு, தனிமையின் விரக்தி உச்சத்தில் இருக்கும் நேரத்தில், நமது மக்கள் புன்னகைக்க ஒரு காரணத்தைத் தருகிறேன். இந்திய இசையைத் தொடரும் அனைத்து மக்களுக்காகவும் நான் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். இது எனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக நேரலையாகப் பார்க்கலாம். இது முதல் முயற்சி என்பதால் சிக்கல்கள் வராமல் இருக்க மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம்".
இவ்வாறு சோனு நிகம் தெரிவித்துள்ளார்.