பாலிவுட்டில் 10 வருடங்கள் நிறைவு: ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சிப் பதிவு
பாலிவுட்டில் தனது 10 வருடங்களை நிறைவு செய்த நடிகர் ராஜ்குமார் ராவ் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் 2010-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ராஜ்குமார் ராவ். 'ஷாகித்', 'ட்ராப்டு', 'நியூட்டன்', 'ஸ்ட்ரீ' என பல்வேறு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர். இவர் திரையுலகில் அறிமுகமாகி மார்ச் 19-ம் தேதி உடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்த கதாபாத்திரங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து ராஜ்குமார் ராவ் கூறியிருப்பதாவது:
"துறையில் எனக்குப் பத்து வருடங்கள். ஒரு குழந்தையாக என் சொந்த ஊரில் நான் கண்ட கனவு நனவானது. ஒரு ஆசிர்வாதம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பெரிய நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவும் அன்பும் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. நன்றி என் கர்ம பூமி மும்பை. எனக்கு இது எளிமையான தொடக்கம் தான். நான் எப்போதும் எனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள, உங்களுக்குப் பொழுதுபோக்க முயற்சித்துக் கொண்டே இருப்பேன்".
இவ்வாறு ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
தற்போது 'லூடோ', 'ரூஹி அஃப்சானா', 'தி வைட் டகர்', 'சலாங்', 'பதாய் தோ' ஆகிய திரைப்படங்களில் ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார்.
