

கரோனா அச்சம் தொடர்பாக வியாபாரிகள் மற்றும் மருத்துவர்களின் செயல்களை ஒப்பிட்டு விவேக் ஓபராய் ட்வீட் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது அல்லது சானிடைசர்களை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது சானிடைசர்கள் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. சென்னையில் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனிடையே கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சானிடைசர்களின் விலையையும், மருத்துவர்களின் சேவையையும் ஒப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கரோனா பாதிப்பு காரணமாக வியாபாரிகள் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளனர். மருத்துவர்கள் தங்கள் சேவையை இலவசமாகச் செய்கின்றனர். இதுதான் வித்தியாசம். இந்தப் போரில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மனிதத்தின் உண்மையான படைவீரர்களாகத் திகழும் அனைத்து மருத்துவர்களுக்கும் என்னுடைய சல்யூட்''.
இவ்வாறு விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.