அமிதாப் பச்சன் நடிக்க ஆசைப்பட்ட பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு: யார் இவர்?

அமிதாப் பச்சன் நடிக்க ஆசைப்பட்ட பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு: யார் இவர்?
Updated on
1 min read

பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் அமிதாப் பச்சன் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரையுலகிலுமே வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்கும் காலம் இது. பல்வேறு முன்னணி திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் எனப் பலருடைய வாழ்க்கைக் கதைகள் படங்களாக உருவாகி வருகின்றன.

தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் படமாகிறது. மேலும், ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்தே 'சூரரைப் போற்று' படம் உருவாகியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆங்கிலத்தில் வெளியான புத்தகத்தைப் படித்துள்ளார் அமிதாப் பச்சன். மிகவும் நெகிழ்ந்துபோய், இவருடைய வாழ்க்கைக் கதையில் நானே நடிக்கிறேன். இளமைக் காலத்துக் கதாபாத்திரத்தில் மகன் அபிஷேக் பச்சன் நடிக்கட்டும் என்று தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

இந்தப் படம் தொடர்பாகத் தன்னை அணுகிப் பேசியுள்ளதாக பாலம் கல்யாண சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தன்னுடைய வாழ்க்கையில் உள்ள நல்ல கருத்துகளை மக்களுக்குச் சொல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றுப் படம் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த கல்யாண சுந்தரம்?

தமிழகத்தில் பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் கல்யாண சுந்தரம். தனது நூலகப் பணியில் சம்பாதித்த அனைத்தையுமே அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். மேலும், தனக்குக் கிடைத்த அனைத்தையுமே முழுக்க அறக்கட்டளைக்கே வழங்கி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க அரசு 'Man of Millinium' என்ற விருதினை வழங்கி, இந்திய ரூபாயின் மதிப்பில் 30 கோடி ரூபாயை பரிசாகக் கொடுத்தது. அதையும் குழந்தைகள் நலனுக்காகக் கொடுத்து விட்டார் கல்யாண சுந்தரம்.

மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது பாலம் கல்யாண சுந்தரத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் கல்யாண சுந்தரம். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதற்காகவே இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in