

'ஷுப் மங்கள் ஜ்யாதா ஸாவ்தான்' படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
ஆனந்த் எல்.ராய், பூஷன் குமார், ஹிமன்ஷு ஷர்மா மற்றும் கிருஷ்ணன் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஷுப் மங்கள் ஜ்யாதா ஸாவ்தான்'. ஹிதேஷ் கேவல்யா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, ஜிதேந்திரா குமார், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு இந்தி திரையுலகில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் திருமணத்துக்காக எப்படிப் பெற்றோரைச் சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை பற்றி சமூக ஆர்வலரும், தன்பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான பீட்டர் டாட்செல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் ‘தன்பாலின உறவுக்கு எதிரான மனநிலையைக் கொண்ட பெரியவர்களின் நம்பிக்கையை பெறும் தன்பாலினக் காதலைப் பற்றி ஒரு புதிய பாலிவுட் படம் வெளியாகியுள்ளது’ என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பீட்டர் டாட்செல்லின் இந்தப் பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘கிரேட்’ என்று குறிப்பிட்டு ரீட்வீட் செய்துள்ளார். இந்தப் பதிவை பகிர்ந்து பாலிவுட் ரசிகர்கள் பலரும் 'ஷுப் மங்கள் ஜ்யாதா ஸாவ்தான்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.