

கார்த்திக்கும் அமனும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிச்சயமாகியிருக்கும் அமனின் தங்கையின் திருமணத்துக்காக குடும்பத்தோடு ரயிலில் செல்கின்றனர். அப்போது அமனும் கார்த்திக்கும் முத்தமிட்டுக் கொள்வதை அமனின் தந்தை பார்த்துவிடுகிறார். அதிர்ச்சி அடையும் அவர் அமனை அழைத்துக் கண்டிக்கிறார்.
மறுநாள் தங்கையின் திருமணத்தில் அனைவரது முன்னிலையிலும் கார்த்திக்கை முத்தமிடுகிறான் அமன். இதனால் தங்கையின் திருமணம் தடைபடுகிறது. கார்த்திக்கை அமனின் தந்தை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். விரக்தியடையும் அமனின் தங்கை மண்டபத்தை விட்டுச் சென்று விடுகிறார். மீண்டும் அமனும் கார்த்திக்கும் இணைந்தார்களா? அமனின் தங்கை கிடைத்தாரா? என்பதே ‘ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தான்’.
மேலே சொன்ன கதையைப் படிக்கும்போது சோகம் பிழியும் ஒரு கதை உங்கள் மனக்கண்ணில் நிழலாடலாம். ஆனால் அதற்கு நேரெதிராக படம் முழுக்க நகைச்சுவையும் கலகலப்பும் இழையோடுகிறது. கார்த்திக்காக ஆயுஷ்மான் குரானா. கதையைத் தேர்ந்தெடுக்கவே ஒரு தனிக்குழு வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. 'விக்கி டோனர்', 'அந்தாதுன்' வரிசையில் மற்றுமொரு படம். அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி வரை உற்சாகம் குறையாமல் நடித்திருக்கிறார். சின்னச் சின்ன மேனரிசங்களையும் அலட்சியமாக வெளிப்படுத்துகிறார்.
அமனாக நடித்திருப்பவர் ஜிதேந்திர குமார். தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சரியாக நடித்து, ஆயுஷ்மானுக்கு அடுத்த இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். அமனின் தந்தையாக நடித்திருப்பவர், அமனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் என படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் தங்கள் பங்கை சரிவரச் செய்திருக்கிறார்கள்.
இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்தற்க்கே இயக்குநர் ஹிதேஷ் கெவால்யாவுக்கு சபாஷ் போடவேண்டும். தன்பாலின ஈர்ப்பை எடுக்கிறேன் பேர்வழி என்று சோக கீதம் பிழிந்து நெஞ்சை நக்காமல் முழுக்க முழுக்க கலகலப்போடும், நகைச்சுவையோடும் சொன்ன விதத்தில் ஜெயிக்கிறார். சின்னச் சின்ன வசனங்களின் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் படும் அவமானங்களையும், இன்னல்களையும் சொன்ன விதம் அருமை.
படத்தின் மிகப்பெரிய பலம் படம் முழுக்கத் தூவப்பட்டுள்ள நகைச்சுவை வசனங்கள்தான். ஒவ்வொரு காட்சியிலும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்கிறது. தனிஷ்க் பாக்சி, கரண் குல்கர்னியின் இசை உறுத்தாமல் இருக்கிறது.
தன்பாலின ஈர்ப்பே படத்தின் மையம் என்றாலும் அமனின் பெற்றோர் இன்னும் தங்களின் பழைய காதலை மறக்காமல் இருப்பது, அமனின் தந்தை கண்டுபிடித்த கருப்பு காலிபிளவர் குறித்த காட்சிகள், அமனின் சித்தப்பாவாக வருபரின் குடும்பம் தன் அண்ணனை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது என படத்தின் பின்னணியில் இருக்கும் பல விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன.
குறை என்று பார்த்தால் முதல் பாதியில் இழுவையாக இருக்கும் சில காட்சிகள், அமன் - கார்த்திக் ஈர்ப்பை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அவர்களுடைய பிரிவு பார்வையாளர்களுக்கு எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சென்டிமென்ட்டாக முடிய வேண்டிய சில காட்சிகள் உடனடியாக வரும் நகைச்சுவை வசனங்களால் எடுபடாமல் போய்விடுகிறது.
தன்பாலின ஈர்ப்பை எந்தவித மேல்பூச்சும், திணிப்பும், ஆபாசமும் இல்லாமல் இயல்பாகவும் கலகலப்பாகவும் சொன்ன விதத்துக்காகவும், நகைச்சுவை வசனங்களுக்காகவும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இந்த ‘ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தான்’.