

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'தக்த்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரண் ஜோஹர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஏ தில் ஹாய் முஷ்கில்’. 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தின் ஒரு பாகத்தை மட்டும் இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து 'தக்த்' என்ற வரலாற்றுக் கதை படமாக்கவுள்ளதாக அறிவித்தார் கரண் ஜோஹர். இதில் ரன்வீர் சிங், கரீனா கபூர், அலியா பட், விக்கி கவுசல், புமி பெட்னேகர், ஜான்வி கபூர் மற்றும் அனில் கபூர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு மற்றும் வெளியீடு எப்போது என்று தெரியாமலேயே இருந்தது.
தற்போது படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டதால், மார்ச் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியீடு என்றும் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து கரண் ஜோஹர் கூறுகையில், “வரலாற்றில் உட்பொதிந்துள்ள மிகவும் பிரமாதமான கதை. கம்பீரமான முகலாயப் பீடத்துக்கான காவியப் போராட்டம். ஒரு குடும்பத்தின், லட்சியத்தின், பேராசையின், துரோகத்தின், காதலின், அடுத்து பீடத்தைப் பிடிப்பதற்கான பேரவாவின் கதை. ஆம், ‘தக்த்’ படம் அன்புக்கான போர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு சுமித் ராய் திரைக்கதை எழுத, ஹுசைன் ஹைத்ரி மற்றும் சுமித் ராய் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.