

இயக்குநர் மகேஷ் பட்டின் வெப் சீரிஸில் அமலா பால் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பே பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், தான் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், அது மறைந்த நடிகர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். தற்போது ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ், முன்னாள் பாலிவுட் நடிகை பர்வீன் பாபியைப் பற்றியது என்று தெரிகிறது.
பர்வீன் பாபி 70களில் இந்தி சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர். அமிதாப் பச்சனோடு மட்டுமே நிறையப் படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை பெரும் வெற்றி பெற்றன. டைம் வார இதழின் அட்டைப்ப டத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர் பர்வீன் பாபி.
80-களின் ஆரம்பத்தில் திரைத்துறையை விட்டு விலகினார். 80-களின் இறுதியில் பர்வீன் பாபிக்கு மனநல ரீதியிலான பிரச்சினை இருந்ததாகப் பல செய்திகள் வந்தன. அமிதாப் பச்சனில் ஆரம்பித்து பில் க்ளிண்டன் வரை தன்னைப் பலர் கொலை செய்யத் திட்டமிட்டு வருவதாகக் குற்றம் சாட்டியவர் பர்வீன் பாபி. தொடர்ந்து ஊடக கவனம் பெற்றுக் கொண்டிருந்த பாபி 2005-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.
தனது இறுதி ஆண்டுகளில் தனியாகவே வாழ்க்கையைக் கழித்தார் பர்வீன் பாபி. கபீர் பேடி, டேனி டென்ஸோங்பா, மகேஷ் பட் என பலரைக் காதலித்திருந்தாலும் இறுதி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இயக்குநர் மகேஷ் பட், பர்வீன் பாபியுடன் தனக்கிருந்த உறவை அடிப்படையாக வைத்தே இந்தத் தொடரை இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பர்வீன் பாபியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அமலா பால் நடிப்பில் 'அதோ அந்த பறவை போல', 'கேடவர்', மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. ஏற்கெனவே 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் சீரிஸின் தெலுங்குப் பதிப்பில் அமலா பால் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.