

’தி இண்டெர்ன்’ என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோனும், ரிஷிகபூரும் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன் ஹாத்வே நடித்த படம் ’தி இண்டர்ன்’. 70 வயது ஆண் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற வாழ்க்கை சுவாரசியமின்றி செல்வதால், ஆன்லைன் ஃபேஷன் விற்பனை நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெறுபவராக வேலைக்குச் சேர்கிறார். இவருடன் இன்னும் மூன்று பேரும் அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற சேர்கின்றனர். வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் அவர், அங்கிருக்கும் இளைஞர்களுக்கு நிறைய ஆலோசனைகளையும் வழங்குகிறார். இவர் அங்குப் பயிற்சி பெறும் நாட்களில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இந்தப் படம்.
கிட்டத்தட்ட 194 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படம் நடிகர்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. இதில் பயிற்சி பெறுவபராக டி நிரோவும், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆன் ஹாத்வேவும் நடித்திருப்பார்கள். அந்த கதாபாத்திரங்களில் தான் முறையே ரிஷி கபூரும், தீபிகாவும் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தீபிகாவின் கா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது.
இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள தீபிகா, "எனது அடுத்த படம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சி. ’தி இண்டர்ன்’ படத்தின் இந்திய வடிவம். கா ப்ரொடக்ஷன்ஸ், வார்னர் ப்ராஸ், அசூர் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். " என்று குறிப்பிட்டுள்ளார். படம் 2021ஆம் வருடம் வெளியாகவுள்ளது.