

கபில்தேவ் சாதனைகள் அளப்பரியது என்று '83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் ரன்வீசர் சிங் புகழாரம் சூட்டினார்.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். மேலும், 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்த வீரர்களாக பல்வேறு நாயகர்கள் கடும் பயிற்சி செய்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, ஃபேண்டம் பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தமிழில் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளது.
இதுவரை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நிலையில், '83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் கபில்தேவ், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக கமலும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ரன்வீர் சிங் பேசும் போது, "மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி. சென்னைக்கு இது தான் எனது முதல் பயணம். இந்த விழாவில் கமல் சாருடன் இருப்பதில் பெருமை. இந்தப் படமே ஒரு மாயாஜாலம் தான். இயக்குநர் கபீர்கான் எப்போதுமே திரையில் மாயாஜாலங்கள் நிகழ்த்தக் கூடியவர். அவர் இந்தக் கதையைக் கூறியபோது பிரமிப்பாக இருந்தது.
என்னைச் சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கிறது. இன்று கமல் சார், கபில்தேவ், ஸ்ரீகாந்த் என பெரிய ஜாம்பவான்களுடன் இருக்கிறேன்.
1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது சரித்திரத்தின் பெருமைமிகு தருணம் அது. அந்தத் தருணத்தைத் தான் நாங்கள் திரையில் கொண்டு வரவுள்ளோம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சென்னையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
கிரிக்கெட்டில் கபில்தேவ் ஒருமுறை கூட போல்ட் ஆனதில்லை என்றார்கள். அவரது சாதனைகள் அளப்பரியது. அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அனுமதித்ததற்கும் தேர்ந்தெடுத்ததற்கும் நன்றி. 83-ம் ஆண்டு கிரிக்கெட் அணியினர் இன்றும் நட்புடன் இருக்கிறார்கள். அந்த நட்பு மனப்பான்மைதான் வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்ததில் நிறைய நட்பைச் சம்பாதித்துள்ளேன்" என்று பேசினார் ரன்வீர் சிங்.
பின்பு, மேடையில் '83' படத்தில் நடித்தவர்களில் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்று வழக்கமான தனது கலகலப்பான பாணியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.