

1983 ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற வரலாற்றை முன்னிலைப்படுத்தி உருவாகும் '83' படத்தை தமிழகத்தில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிடவுள்ளது.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அணித் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மொஹீந்தர் அமர்நாத் கதாபாத்திரத்தில் சகீப் சலீம் நடிக்கிறார்.
மேலும், 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்த வீரர்களாக பல்வேறு நாயகர்கள் கடும் பயிற்சி செய்து நடித்துள்ளனர். இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, ஃபேண்டம் பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
தமிழில் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் வெளியிடவுள்ளது. இது தொடர்பாக கமல், "'83' படத்தை தமிழில் வழங்குவதில் மிகுவும் பெருமை கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வம் கொள்கிறேன்.
அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்குச் சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. பல்வேறு மக்களுக்குத் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலகக்கோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார் கமல்.
தமிழில் இந்தப் படத்தை கமல் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பினை நாகார்ஜுனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.