

கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் கண்ணீர் விட்டதாக நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். இவர் 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்தே அவர் தமிழில் எந்தப் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ஒரு சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற செய்திகளும் வந்து, பின் அவை வெறும் புரளிகளாக மட்டுமே கரைந்து போயின.
சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்துச் சிலாகித்துப் பேசியுள்ளார் ஜான்வி கபூர். "நான் கீர்த்தியின் ரசிகை. ‘மகாநடி’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அழுது கொண்டே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். அப்போது நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் செய்தது அவர் மீது இருந்த உண்மையான அன்பினால் தான்" என்று ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் இன்று வரும் படங்களை விட மேம்பட்டவை என்று கூறியுள்ள ஜான்வி கபூர், தனக்குத் தென்னிந்தியப் படங்களில் பணியாற்ற அதிக விருப்பம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
நாக் அஷ்வின் இயக்கத்தில் 'மகாநடி' படத்தில், நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.