அட்லி மும்பையில் முகாம்: கை கொடுப்பாரா ஷாரூக் கான்?

அட்லி மும்பையில் முகாம்: கை கொடுப்பாரா ஷாரூக் கான்?
Updated on
1 min read

வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள அட்லி, மும்பையில் முகாமிட்டுள்ளார். அங்கு ஷாரூக் கானை சந்தித்து தனது இறுதிகட்ட கதையை விவரித்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படம், மிகப்பெரிய வசூலைக் குவித்தது. ஆனால், படத்தில் முதலீடு செய்த அனைவருக்குமே குறைந்த அளவிலான லாபமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'பிகில்' வெளியாவதற்கு முன்பே ஷாரூக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், இந்தக் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. 'பிகில்' வெளியானவுடன் மனைவியோடு வெளிநாடு சென்றுவிட்டார் அட்லி.

வெளிநாட்டில் இருந்து கொண்டே ஷாரூக் கானுக்கு தான் கூறிய கதைக்குத் திரைக்கதை வடிவத்தை முடித்து அனுப்பியிருக்கிறார் அட்லி. ஆனால், அது ஷாரூக் கானுக்கு திருப்தி அளிக்கவில்லை. பல்வேறு மாற்றங்களைச் சொல்லித் திரும்ப அனுப்பியுள்ளார். இது அட்லியை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. இதனால் இந்தக் கூட்டணி இணைவதில் சிக்கல் நீடித்தது.

தற்போது வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ள அட்லி, மும்பையில் முகாமிட்டுள்ளார். ஷாரூக் கான் சொன்ன மாற்றங்கள் அனைத்தையும் முடித்து, அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அமேசான் நிகழ்ச்சியில் ஷாரூக் கான் சிறந்த விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அட்லியும் கலந்து கொண்டுள்ளார். அவர் ஷாரூக் கான் மேலாளருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். இதனால், விரைவில் ஷாரூக் கான் - அட்லி கூட்டணி தொடர்பான இறுதி முடிவு என்ன என்பது விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in