

தன் மனைவிக்கு பக்ஷிராஜன் கெட்டப்பில் திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.
இந்தித் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் அக்ஷய் குமார். 2019-ம் ஆண்டு இவருடைய படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இந்த ஆண்டு ஒவ்வொரு விடுமுறை தினத்துக்கும் தனது படங்கள் வெளியாவது போல் வரிசைப்படுத்தி வைத்துள்ளார்.
இன்று (ஜனவரி 17) அக்ஷய் குமாரின் திருமண நாளாகும். இவருக்கும் ட்விங்கிள் கண்ணாவுக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும், நீட்டாரா என்ற மகளும் உள்ளனர்.
திருமண நாளை முன்னிட்டு '2.0' பக்ஷிராஜன் கெட்டப்பில் இருந்து, மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண வாழ்த்து தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அக்ஷய் குமார், "திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் புகைப்படம் இது.
சில நாட்கள் அரவணைக்கத் தோன்றும். சில நாட்கள், இங்கு நீங்கள் பார்ப்பது போல இருக்கும். என்ன சொன்னாலும், செய்தாலும், நான் வேறொரு வகை வாழ்க்கையை விரும்பியிருக்க மாட்டேன். திருமண நாள் வாழ்த்துகள் டினா. அன்புடன் பக்ஷிராஜன்" என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.