

லண்டனில் ஊபர் டேக்ஸியில் பயணம் செய்த நடிகை சோனம் கபூர், அது மிகவும் பயங்கர அனுபவமாக இருந்ததாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
புதன்கிழமை இரவு ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோனம் கபூர், "மக்களே, ஊபர் டேக்ஸியில் பயணித்ததால் லண்டனில் எனக்கு மிக பயங்கரமான அனுபவம் கிடைத்தது. தயவுசெய்து ஜாக்கிரதையாக இருங்கள். உள்ளூர் பொதுப் போக்குவரத்தையோ, கேப்களையோ பயன்படுத்துவதே பாதுகாப்பானது. நான் நடுங்கிவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கார் ஓட்டுநர் நிலையாக இல்லை. கத்திக்கொண்டும், கூச்சல் போட்டுக்கொண்டும் வந்தார். பயணம் முடியும்போது நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்" என்று கூறியுள்ளார்.
ஊபர் நிறுவனம் சோனம் கபூரை ட்விட்டரில் தொடர்பு கொண்டு, "மன்னிக்க வேண்டும் சோனம். உங்கள் ஈ மெயில் முகவரி, மொபைல் எண்ணைத் தர முடியுமா? நாங்கள் இதை விசாரிக்கிறோம்" என்று பதிலளிக்க, அதற்கு சோனம், "நான் உங்கள் செயலியில் புகாரளிக்க முயன்றேன். சம்பந்தமில்லாத பதில் தான் உங்கள் தானியங்கி அமைப்பிலிருந்து கிடைத்தது. உங்கள் அமைப்பை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இனிமேல் உங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று பதிவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தான் இரண்டாவது முறையாகத் தனது பைகளை இழந்துவிட்டதாக சோனம் கபூர் கோபமாக ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.