

ஆசிட் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுக் காணொலி ஒன்றை நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார்.
மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள படம் 'சப்பாக்'. இது, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த லக்ஷ்மி அகர்வால் என்ற இளம்பெண்ணின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஆசிட் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோன் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில் படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்கின்றனர். இதை காரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் தீபிகா மற்றும் படக்குழுவினர் கண்காணிக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் மிக எளிதான முறையில் ஆசிட் கிடைக்கிறது. மொத்தம் 24 ஆசிட் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கடைகளில் எந்தக் கேள்வியுமின்றி கடைக்காரர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஒரே ஒரு கடைக்காரர் மட்டுமே அடையாள அட்டை கேட்கிறார். மற்ற அனைவரும் ஏதோ மளிகைப் பொருளைப் போல ஆசிட் விற்கின்றனர்.
காணொலியின் இறுதியில் தோன்றும் தீபிகா, ''ஆசிட் சர்வசாதரணமாக விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன. சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதைப் பற்றி அறிந்தால் உடனடியாக போலீஸில் புகார் அளிக்க வேண்டும்” என்றார்.
ஆசிட் விற்பதற்கும் வாங்குவதற்குமான விதிமுறைகளை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவதோடு காணொலி நிறைவடைகிறது.