மொஹீந்தர் அமர்நாத் கூறிய அட்வைஸ்: '83' நடிகர் பகிர்வு
தனக்கு கிரிக்கெட் வீரர் மொஹீந்தர் அமர்நாத் ஆலோசனை கூறியது பற்றி நடிகர் சகீப் சலீம் பகிர்ந்துள்ளார்.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அணித் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மொஹீந்தர் அமர்நாத் கதாபாத்திரத்தில் சகீப் சலீம் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்காக அசல் கிரிக்கெட் வீரர்களிடம் நடிகர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அப்படி மொஹீந்தர் அமர்நாத்திடம் பயிற்சி பெற்றுள்ள சகீப் சலீம், அவர் சொன்ன ஆலோசனை குறித்துப் பகிர்ந்துள்ளார்.
"அமர்நாத் அவர்கள் எனக்குக் கொடுத்த மிக மதிப்புமிக்க ஆலோசனை என்பது, அமைதியாக ஆட்டத்தில் கவனம் செலுத்து என்பதே. அதை அவர் சொன்ன விதத்தில் என்னவோ இருந்தது. அந்த ஆலோசனை என்னிடமே தங்கிவிட்டது. அந்த ஆலோசனையை என் தினசரி வாழ்க்கையிலும் பயன்படுத்துவேன்.
நீங்கள் நடிக்கும் கதாபாத்திரம் தனிப்பட்ட முறையில் உங்களை பாதிக்கும். நான் அமர்நாத் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அது என்னை ஒரு மனிதனாகச் சாந்தப்படுத்தியது. ஏனென்றால் அவர் அப்படித்தான். அதை சரியாக நடிக்க வேண்டும் என்றால் நான் ஜென் மனநிலையில் இருக்க வேண்டும். நான் வழக்கமாக அதிக உற்சாகமாக இருப்பவன் என்பதால் அவரது அமைதியான கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமாக இருந்தது. அதனால் தியானம் செய்ய ஆரம்பித்து என்னை நானே அமைதியாக்கிக் கொண்டேன்.
அமர்நாத் பற்றிய கதைகளை என் அப்பாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். அப்படியான ஒரு சகாப்தம் போன்ற ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதும், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களில் வாழ்ந்தது எல்லாம் கனவு நனவானதைப் போல. எங்களுடன் அவர் நேரம் செலவிட்டுள்ளார். முதலில் 10 நாள் பயிற்சியில் தரம்ஷாலாவில் அனைவரும் சந்தித்தோம். அங்கு அவருடன் நான் பயிற்சி பெற்றேன். நிறைய நேரம் அவருடன் செலவிட்டேன். அவரை சந்தித்தது அற்புதமாக இருந்தது" என்று சகீப் சலீம் கூறியுள்ளார்
'83' ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.
